
முக்காலமும் குளித்தாலும் காகம் கொக்கு ஆகாது | பழமொழிக் கதைகள்

கஷ்டப்படுவோர்களைக் கண்டால் உதவும் குணம் கொண்டவர் உத்தமராசர். அவர் வடுகபட்டி பகவதி அம்மன் மண்டபத்தில் நடந்த திருமணத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது வழியிலே…. இருபது வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன், “அய்யா ! பசியாயிருக்குது, ஏதாவது பணம் கொடுத்து உதவுங்கள்” என்று கேட்டான்.
“தம்பி ! எனது நண்பரது வீட்டுத் திருமணத்திற்குச் செல்லுகிறேன் . அங்கே வந்தால் முதலில் உன்னுடைய பசியினைப் போக்குகிறேன். அப்புறம், உனக்கு நிரந்தர பசியினைப் போக்க வழி செய்கிறேன்” என்று அழைத்துச் சென்றார்.
திருமண மண்டபத்தில்… “இந்த தம்பி யாரு?” என்று சிலர் கேட்டனர்.
”இவன் எனக்கு மிகவும் நெருங்கிய உறவுக் காரப் பையன்” என்று உத்தமராசர் கூறினார்.
திருமணம் முடிந்தவுடன் , விருந்து தடபுடலாக நடைபெறத் தொடங்கியது . விருந்திற்கு வாலிபனை அழைத்துச் சென்றார் உத்தமர். இருவரும் திருப்தியாக விருந்துண்டனர். கொடைக்கானல் பகுதியிலிருந்து காலை சீக்கிரம் கிளம்பி வந்ததினால், தூக்கக் கலக்கம் உத்தமருக்கு ஏற்பட்டது. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்ற பாணியில் உத்தமர் மண்டபத்தின் ஓய்வு அறையில் சற்று நேரம் படுத்தார்.
அரைகுறை தூக்கத்திலிருந்தபோது , மண்டபத்தில் கே… கே… வென்ற சத்தம் கேட்டது . திருமணத்திற்கு வந்திருந்தோர் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.
தற்கு மேல் தூங்க முடியாத உத்தமர் எழுந்து, ஓடிக் கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி, “என்ன விஷயம்… ஏன் இப்படி ஓடிக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டார்.
”நீங்கள் அழைத்து வந்தீங்கில்லே ஒரு பையனை”…. “அவனுக்கு என்னாச்சு ?”
“அவனுக்கு ஒன்றும் ஆகலே . ஆனா, மணப் பெண்ணுடைய நகைகளைத் தான் எடுத்திட்டான். அவனைப் பிடிக்கத்தான் ஓடிக்கிட்டிருக்காங்க” என்று கூறி முடிப்பதற்குள், அந்த திருட்டு வாலிபனைப் பிடித்து உத்தமரிடம் இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தினர்.
விருந்துண்டதெல்லாம் வெளியே வரும் அளவிற்கு அடித்து துவைத்து எடுத்திருந்தனர். வாலிபன் போட்டிருந்த சட்டை வேட்டியெல்லாம் தாறுமாறாக கிழிந்திருந்தது. உடலிலிருந்தும் முகத்திலிருந்தும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பார்க்கப் பரிதாபமாகத் தான் இருந்தது.
தன்னைக் காப்பாற்றுமாறு வாலிபன் கெஞ்சினான் . உதவ எண்ணிவந்த உத்தமரின் மனம் மாறியது. திருட்டுப் பயலை எங்கு கொண்டு சென்றாலும் திருந்த மாட்டான் என்ற முடிவுக்கு வந்தார்.
“தம்பி ! முக்காலமும் காகம் முழுக முழுகக் குளித்தாலும் அது கொக்கு ஆகிவிட முடியாது என்று பெரியவங்க சொல்லியிருக்காங்க. அது போல, திருட்டுத் தனம், பொய் சொல்றவங்களின் குணத்தை ஒருபோதும் மாற்ற முடியாது என்பது உன் விஷயத்திலும் அது உண்மையாகி விட்டது” என்று மிகவும் வேதனையுடன் கூறிவிட்டு கொடைக்கானலை நோக்கிப் புறப்பட்டார்.